காரைக்குடி: 10 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெரும்பகுதி நீக்கம்
காரைக்குடி: 10 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெரும்பகுதி நீக்கம் - மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 'தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த தவறான சிகிச்சையின் விளைவாக 10 வயது சிறுவனுக்கு ஆணுறுப்பு அகற்றும் சிகிச்சை (Penectomy) செய்யப்பட்டதாக' சிறுவனின் பெற்றோர் காவல் துறையிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் ஒரு மாதம் கடந்தும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, சிறுவனின் பெற்றோர், வணிக சங்கங்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஜூலை 7ஆம் தேதி காரைக்குடியில் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 'மருத்துவ சேவையில் அலட்சியம்' என்ற அடிப்படையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சார்பாக விசாரணை நடைபெற்று வருவதால், முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை பிபிசி தமிழிடம் தெரிவித்தது.
நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.
"தவறான சிகிச்சை காரணமாக என் மகனின் ஆணுறுப்பில் பெரும்பகுதி நீக்கப்பட்டதால், அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது" என்று சிறுவனின் தாயார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எங்களுக்கு ஒரேயொரு ஆண் குழந்தைதான். அவனுக்கு ஆணுறுப்பில் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டது. அதனால் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கடந்த மே மாதம் அழைத்துச் சென்றோம். என் மகன் பிறந்த மருத்துவமனையும் அதுதான். அங்கு மருத்துவர் பார்த்துவிட்டு, அவனுக்கு ஆணுறுப்பில் உள்ள முன்தோலை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் எனக் கூறினார்" என்று தெரிவித்தார்.
மேலும், "அச்சப்படத் தேவையில்லை, சாதாரண அறுவை சிகிச்சைதான், ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டும்' என மருத்துவர் கூறினார். நாங்களும் சரி என்றோம். கடந்த மே 21ஆம் தேதி என் மகனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் காரைக்குடியில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர் என மருத்துவமனையில் கூறினார்கள்" என்றார்.
"மறுநாள், மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றார்கள். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் எனக் கூறினார்கள்" என்று கூறிய அவர், ஆனால் வீட்டிற்கு வந்த சில நாட்களில் தனது மகனுக்கு ஆணுறுப்பில் கடும் வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்தார்.
"ஆணுறுப்பு கறுத்துவிட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் துடித்தான். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஆணுறுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளது, எனவே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள். இப்படியே எங்களை இரு மருத்துவமனைகளிலும் அலைக்கழித்தார்கள்."
"பின்னர் இரண்டாவது தனியார் மருத்துவமனையில், மே 27ஆம் தேதி என் மகனுக்கு மீண்டுமோர் அறுவை சிகிச்சை செய்தார்கள். இரண்டு நாட்களில் சரியாகிவிடும், கவலை வேண்டாம் எனச் சொன்னவர்கள். திடீரென 28ஆம் தேதி காலையில் எங்களிடம், உடனடியாக பையனை மதுரைக்கு அழைத்துச் செல்லுங்கள், தொற்று அதிகமாகிவிட்டது எனக் கூறினார்கள்" என்று நடந்ததை சிறுவனின் தாயார் விவரித்தார்.
மேலும் பேசிய அவர், "அதிலும் மதுரையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நாங்கள் அவர்கள் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதால் வேறு தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம்" என்று கூறினார்.
"என் மகனை பரிசோதித்த மருத்துவர்கள் 'ஆணுறுப்புப் பகுதி கறுத்து, தொற்று பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது. உடனடியாக ஆணுறுப்பின் பெரும் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியாக வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்" என்று கூறியதாகவும் சிறுவனின் தாய் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
பின்னர், "வேறு வழியின்றி நாங்களும் என் மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதுமென்ற சூழ்நிலையில் அதை ஒப்புக்கொண்டோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து காரைக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளின் இரு மருத்துவர்கள் மீது காவல்துறையிடமும், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமும் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுடன் இணைந்து கடந்த மாதம் விளக்கம் அளித்திருந்த இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் மருத்துவர் ஸ்ரீதர், "சிறுவனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை எளிதாக, பரவலாக செய்யக்கூடிய சிகிச்சை. ஆனால் அவருக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னை, 10 லட்சம் நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அரிதான ஒன்று. நடந்தது ஒரு மருத்துவ விபத்து. பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்ய, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தயாராக உள்ளனர்," என்று கூறினார்.
அதோடு, "சிறுவனுக்கு சில நாட்களில் பிரச்னை சரியாகிவிடும். சிறுவனின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மருத்துவ சங்கம் வருத்தம் தெரிவிக்கிறது. சிறுவனுக்கு செய்யப்பட்ட சிகிச்சையில், ஆணுறுப்பு முழுமையாக அகற்றப்படவில்லை. சிறு பகுதி மட்டுமே நீக்கப்பட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் நுண்ணிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, "ஏற்கெனவே இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துவிட்டது" என்று மட்டும் தெரிவித்தனர்.
'ஆணுறுப்பின் பெரும்பகுதி நீக்கப்பட்டுள்ளது'
ஆனால் சிறுவனின் தாயார், "நாங்கள் புகார் அளித்த பிறகு தனியார் மருத்துவமனைகள் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மகனின் ஆணுறுப்பில் பெரும்பகுதி நீக்கப்பட்டுள்ளது, விதைப்பை மட்டுமே உள்ளது" என்றார்.
"இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து என் மகனால் மீள முடியவில்லை. அவன் இப்போது வெளியே செல்வதில்லை. விளையாடச் சென்றால் சக வயது சிறுவர்கள் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருந்துகிறான். யாரிடமும் பேசாமல் எப்போதும் ஓரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறான்" என்றார் அவர்.
"சிறுவயதிலேயே ஏற்பட்டுள்ள இப்படியொரு இழப்பை அவன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்றே தெரியவில்லை," என்றும் வேதனையுடன் பேசினார் சிறுவனின் தாயார்.
முற்றுகைப் போராட்டம்
காவல்துறையில் புகார் அளித்து ஒரு மாதம் கடந்தும்கூட சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர், "அதனால்தான் ஜூலை 7ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வணிக சங்கங்களுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்" என்றார்.
"சிறுவனின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இன்னும் மருத்துவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதால்தான் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ஆனால், காவல்துறை எங்களைக் கைது செய்து மாலை வரை அடைத்து வைத்தது" என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவாஜிகாந்தி.
மேலும் அவர், "இதில் ஒரு மருத்துவர் மீது ஏற்கெனவே சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இனியும் காவல்துறை இதை நிதானமாகவும் மெதுவாகவும் கையாளக்கூடாது" என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் உள்படப் பல தரப்பினரும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்குடியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
காவல்துறை கூறுவது என்ன?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, "இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இது மருத்துவத் துறை தொடர்பான வழக்கு எனும்போது, 'மருத்துவ சேவையில் அலட்சியம்' காட்டப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதை காவல்துறையினர் விசாரித்து ஒரு முடிவுக்கு வர முடியாது. எனவேதான் சுகாதாரத் துறை இணை இயக்குநரின் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
"அந்த விசாரணையின் அறிக்கை வந்த பிறகு, மருத்துவர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.
"ஆணுறுப்பு நீக்கம் (Penectomy) என்பது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாகும். இதில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், ஒருவரின் மருத்துவ நிலையைப் பொறுத்து ஆணுறுப்பின் ஒரு பகுதியை அல்லது முழு ஆணுறுப்பையும்கூட அகற்றலாம். ஆணுறுப்பை பாதிக்கும் ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்க இது செய்யப்படுகிறது" என்று விளக்கினார் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவத் துறை தலைவராக உள்ள மருத்துவர் எஸ். சந்திரசேகர்.
குறிப்பாக, "ஆணுறுப்பு புற்றுநோய்க்கு (Penile Cancer) இந்த அறுவை சிகிச்சை பயன்படுகிறது. காரைக்குடியைச் சேர்ந்த சிறுவனைப் பொருத்தவரை, ஆணுறுப்புக்கு ரத்த ஓட்டம் தடைபடுவது அல்லது தீவிரமான பாக்டீரியா தொற்று காரணமாக ஆணுறுப்பின் திசுக்கள் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அப்போது அந்தத் தொற்று உடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க ஆணுறுப்பின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டிருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், சுகாதாரத் துறையின் அறிக்கை வந்த பிறகே இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவுக்கும் வர முடியும் என்றார் மருத்துவர் சந்திரசேகர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
How it works
Once you click Generate, Ollama reads this article and crafts 5 comprehension questions. Your answers are graded against the article content — general knowledge won't be enough. Score 70+ to count toward your certificate.
Questions are cached — you'll always get the same 5 for this article.