general958 wordsRead on Arc Codex

பாஜக அரசு யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப் போவதாக அறிவித்தது ஏன்?

பாஜக அரசு யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப் போவதாக அறிவித்தது ஏன்? நாட்டின் உடனடி பணப் பரிவர்த்தனை நெட்வொர்க் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற கட்டண சேவை வழங்குநர்களை அனுமதிக்கும் மசோதாவுக்கு மக்களவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) வசூலிப்பதில் இருந்து வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களைத் தடுத்த சட்ட விதியை நீக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. எம்.டி.ஆர் என்பது ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போதெல்லாம் வணிகர்கள் வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்குச் செலுத்தும் ஒரு சிறிய கட்டணம். ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் நீண்ட காலமாக எம்.டி.ஆரை கோரி வந்தன. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருவதால், எந்தவொரு வணிகக் கட்டணமும் இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவது இனி பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்காது என்று இந்த நிறுவனங்கள் வாதிட்டன. அதே நேரத்தில், யுபிஐ முறையை நிதி ரீதியாகத் தற்சார்புடையதாக மாற்ற விரும்புவதாகவும், அதனாலேயே எம்.டி.ஆரை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசு கூறுகிறது. ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்திற்கான (யுபிஐ) வருடாந்திர மானியம் அதன் உண்மையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பணப் பரிவர்த்தனைத் துறை நீண்ட காலமாக எச்சரித்து வந்த நிலையில், இந்த மாற்றம் வந்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற நிதி நிலைக் குழுவிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த எம்.டி.ஆரை வரவேற்றுள்ளது. "இந்தச் சூழலியலில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எம்.டி.ஆர் கட்டணத்தை நியாயமான மற்றும் சமமான முறையில் பகிர்ந்தளிப்பது, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பணம் செலுத்தும் வசதிகளைக் கொண்ட வலையமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்ய ஊக்கமளிக்கும். இது யுபிஐ முறையை அதிக அளவில் ஏற்றுக் கொள்ளச் செய்யவும், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், பரிவர்த்தனை அளவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும்" என்று ரிசர்வ் வங்கி அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. 'சலுகைகள் போதாது' எம்.டி.ஆர் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் மாறுபட்ட சமிக்ஞைகளை வழங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "உள்கட்டமைப்பை இயக்குவதற்கான செலவை யாரேனும் ஏற்க வேண்டியிருக்கும்" என்று கூறினார். இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் "அனைவரும் அணுகக் கூடியதாகவும், மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், நீடித்துச் செயல்படக் கூடியதாகவும்" இருப்பதை உறுதி செய்வதில்தான் ரிசர்வ் வங்கியின் கவனம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ரிசர்வ் வங்கி 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் யுபிஐ பயனர்களை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதுள்ள 555 மில்லியன் பயனர்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க உயர்ந்த இலக்கு. இந்தப் புள்ளி விவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. இந்த அமைப்பை இயக்குவதற்கும் பாதுகாப்பதற்குமான செலவுகளை ஈடுகட்டும் வழிமுறையை வங்கிகளும் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களும் நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. தற்போதைய பட்ஜெட்டில், எம்.டி.ஆர் இல்லாத பரிவர்த்தனைகளுக்காக வங்கிகளுக்கு இழப்பீடு வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு அரசு ரூ.2,000 கோடியை ஒதுக்கியுள்ளது. பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், "சில மதிப்பீடுகளின்படி, அமைப்பைப் பராமரித்து மேம்படுத்துவதற்கான ஆண்டு செலவில் இந்தத் தொகை 15%க்கும் குறைவானதாகும். குறிப்பாக சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவைப்படும் கணிசமான முதலீடும் இதில் அடங்கும். இதுவரை, யுபிஐ ஒரு பொதுப் பயன்பாட்டு சேவை என்பதால் அதன் செலவுகளுக்கு வங்கிகள் பங்களிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) மார்ச் 2026இல் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்தே இந்திய அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் இலவச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் கொள்கையை வர்த்தகத் தடையாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. அந்த அறிக்கைப்படி, விசா (Visa) மற்றும் மாஸ்டர் கார்டு (Mastercard) போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிப்பதால் இது அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 80% யுபிஐ பரிவர்த்தனைகள் கூகுள் பே மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபோன்பே மூலம் செயலாக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது என்ன மாறும்? அக்டோபர் 15 முதல், 2,000 ரூபாய்க்கு மேல் யுபிஐ மூலம் செய்யப்படும் எந்தவொரு கொள்முதலுக்கும் 0.4% வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்.டி.ஆர்) பொருந்தும். இருப்பினும், இந்த எம்.டி.ஆர் கடைக்காரரிடம் இருந்து வசூலிக்கப்படுமே தவிர, வாடிக்கையாளரிடம் இருந்து அல்ல. நீங்கள் ஒரு கடையில் 2,100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி, யுபிஐ மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், கடைக்காரருக்கு எம்.டி.ஆராக ரூ.8.4 வசூலிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 எம்.டி.ஆர் விதிக்கப்படும். நபருக்கு நபர் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாடச் சிறு வணிகப் பரிவர்த்தனைகள் பெரும்பாலானவை முன்பைப் போலவே இலவசமாகவே இருக்கும். யுபிஐ நெட்வொர்க்கை இயக்கும் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ), இந்தக் கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், சைபர் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு, புத்தாக்கம், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. "எம்.டி.ஆரில் இருந்து உருவாக்கப்படும் வருவாய், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், புத்தாக்கம், இணைய பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் மேலும் முதலீடு செய்ய யுபிஐ சூழலியலுக்குள் மட்டுமே விநியோகிக்கப்படும்" என்று என்.பி.சி.ஐ கூறியுள்ளது. எம்.டி.ஆர் அமல்படுத்தப்பட்ட பிறகும், கார்டு மூலம் பணம் செலுத்துவதைவிட யுபிஐ கணிசமாகக் குறைந்த செலவுடையதாகவே இருக்கும் என்று அரசாங்கமும் என்.பி.சி.ஐ-யும் தெரிவிக்கின்றன. வழக்கமான கடன் அட்டைகளுக்கான எம்.டி.ஆர் பொதுவாக 1.5% முதல் 2.5% வரை இருக்கும் என்றும், டெபிட் அட்டைகளுக்கான எம்.டி.ஆர் 0.90% வரை இருக்கலாம் என்றும் என்.பி.சி.ஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட யுபிஐ, தற்போது பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பாகத் திகழ்கிறது. பணப் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசின் முடிவை நிதித் தொழில்நுட்பத் துறை (Fintech) வரவேற்றுள்ளது. "இந்த நிறுவனங்கள் யுபிஐ-ஐ மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றின. ஆனால், அதிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கான தெளிவான வழிமுறைகள் அவற்றிடம் இருக்கவில்லை," என்று அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஃபைன் லேப்ஸ் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அம்ரிஷ் ராவ் தனது எக்ஸ் பக்கத்தில், "யுபிஐ-இல் எம்.டி.ஆர் அமல்படுத்தப்படுவது, நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான பார்வையைப் பெருமளவில் மாற்றும். நிலையான வருவாய் மாதிரி இல்லாமலேயே நிறுவனங்கள் கட்டமைக்கப்படும் ஒரு துறையாகவே இது நீண்ட காலமாகப் பார்க்கப்பட்டு வந்தது. யுபிஐ-க்கான நிலையான வருவாய் முறை இந்தப் பார்வையை மாற்றி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த நிதித் தொழில்நுட்பச் சூழலுக்கும் பெரும் ஊக்கமாக அமையும்," என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், இது வணிகர்கள் மீது சுமத்தப்படும் ஒரு வகையான வரி என்றும், இந்தச் சுமையை வணிகர்கள் மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முயலக்கூடும் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இது யுபிஐ வளர்ச்சியின் வேகத்தைத் தடுத்துவிடக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். "யுபிஐ மீது விதிக்கப்படும் எந்தவொரு எம்.டி.ஆர் கட்டணமும், இந்தியாவில் எந்தவிதத் தடையுமின்றி கடிகார முள் போலத் துல்லியமாக இயங்கி வரும் ஒரே அமைப்பைச் சிதைத்துவிடும்," என்று பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எம்.டி.ஆர் இப்போது அறிமுகம் செய்யப்பட்டது ஏன்? இந்திய அரசின் கொள்கைகள் தொடர்ந்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வந்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பிரபலப்படுத்த, யுபிஐ மற்றும் ரூபே டெபிட் அட்டை பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை அரசு ரத்து செய்திருந்தது. அதற்கு ஈடாக, வங்கிகளுக்கும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. யுபிஐ வலையமைப்பை இயக்குவதற்கான ஆண்டுச் செலவு தோராயமாக ரூ.20,000 கோடி என தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக என்.பி.சி.ஐ கூறியுள்ளது. இதில் சேவையகங்கள், அலை வரிசை, மோசடித் தடுப்பு, வங்கிகளின் தொழில்நுட்ப ஆதரவு போன்ற செலவுகள் அடங்கும். மேலும், எம்.டி.ஆர் இல்லாத நிலை யுபிஐ-ஐ நிதி ரீதியாக நீடித்து இயங்க முடியாத ஒன்றாக ஆக்குகிறது என்று மார்ச் மாத நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையும் குறிப்பிட்டிருந்தது. பி.டி.ஐ செய்தி முகமையின் தகவல்படி, 2026-27 நிதியாண்டில் யுபிஐ மற்றும் ரூபே செயல்பாட்டிற்காக அரசு ரூ.2,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் பணப் பரிவர்த்தனை அமைப்பை நிர்வகிப்பதற்கான செலவுக்கும், அதற்கு முழுமையாக நிதியளிக்க வேண்டுமென்ற அரசின் விருப்பம் அல்லது திறனுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியே, கட்டுப்படுத்தப்பட்ட எம்.டி.ஆர்-ஐ அமல்படுத்த வேண்டுமென்று பணப் பரிவர்த்தனைத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கான முக்கியக் காரணம். புதிய கட்டமைப்பு தொடர்பான தனது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில், இந்த வருடாந்திர ஊக்கத்தொகையை "ஒரு நிரந்தரத் தீர்வுக்குப் பதிலாக, குறுகிய கால இடைக்கால நிதியுதவி" என்றே என்.பி.சி.ஐ குறிப்பிட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடுகளை மட்டுமே நம்பியிருப்பது நிதி கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதோடு, வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீண்டகால தொழில்நுட்ப முதலீடுகளை மேற்கொள்வதையும் கட்டுப்படுத்துவதாகவும் என்.பி.சி.ஐ தெரிவித்துள்ளது. பெரிய வணிக நிறுவனங்கள் அரசின் நிதியுதவியை மட்டுமே தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, கட்டுப்படுத்தப்பட்ட எம்.டி.ஆர் கட்டணத்தை விதிக்க அனுமதிக்க வேண்டுமென இந்திய பணப் பரிவர்த்தனைகள் கவுன்சில் பல ஆண்டுகளாகக் கோரி வருகிறது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

How it works

Once you click Generate, Ollama reads this article and crafts 5 comprehension questions. Your answers are graded against the article content — general knowledge won't be enough. Score 70+ to count toward your certificate.

Questions are cached — you'll always get the same 5 for this article.